Monday, February 6, 2012

தைப்பூச திருநாளும் நமது சிந்தனைகளும்

ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதுகிறேன். ரெகுலராக எழுதுபவரக்ளை பார்க்கும் போது ஆச்சிரியமாகவும் கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இருக்கும் வேலை நடுவில் எப்படி தினசரி பதிவு எழுத முடிகிறது இவர்களால்??

சரி நண்பர்களே…… இன்றைய தலைப்பைப் பற்றி சிந்திப்போம்.

இந்து மதத்தில் பல திருநாள்கள்,பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் காரணங்கள் உண்டு.

தைப்பூச நாளைப் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நாளை பற்றி யோசித்தது உண்டா???


சரி …. பார்போம் ….. முதலில் தைப்பூசம் என்றால்......……??

மாதத்தில் முப்பது நாட்களில் அமாவாசை, பெளர்ணமி நாட்கள் சிறப்பு வாய்ந்தவை. இதில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும். கவனித்திருக்கிறீர்களா!! 

உதாரணமாக
சித்திரை – சித்ரா பொளர்ணமி, வைகாசி- விசாகம், ஆனி- கேட்டை, ஆடி- உத்திராடம், ஆவணி- அவிட்டம், புரட்டாசி- பூரட்டாதி, ஐப்பசி- அசுவினி, கார்த்திகை - கார்த்திகை, மார்கழி - திருவாதிரை, தை-பூசம், மாசி- மகம், பங்குனி- உத்தரம்.
இந்த நாட்களெல்லாமே சிறப்புமிக்க விழா நாட்களாகும்

தைமாதம் என்பது உத்தராயண காலத்தின் ஆரம்பம். (அதாவது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களுக்கு காலைப் பொழுதாகும்)
இதில் தைப்பூசத் தினத்தில் தான் சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்பர். 

அறிவியல் ரீதியாக பொளர்ணமி என்பது என்ன என்று நமக்கு தெரியும்---- சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் இருக்கும். சூரியனின் ஒளி பூமியின் மறைத்தல் இல்லாமல் முழுமையாக விழுவதால் தான் அது முழு நிலாவாக (பொளர்ணமி யாக) இருக்கிறது. இதை தான் மேலே ஜோதிட ரீதியில் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆக தைமாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் பொளர்ணமி நாளில் கொண்டாடப்படுவது தான் தைப் பூசம் ஆகும்.

ஏன் கொண்டாட வேண்டும்??

முடிந்தவரை சம்பவங்களையும் அதோடு கூடிய எனது சிந்தனைகளுயும் சொல்கிறேன்
இந்த நாளில் பல சிறப்புகள் நடந்ததாக புராண கதைகளும்,வரலாற்று செய்திகளும் சொல்கின்றன.

அதாவது…
இந்த நாளில் உலகம் தோன்றியதாக சொல்லபடுகிறது. அதாவது worlds birthday என்று சொல்லலாம். தனி மனித பிறந்த நாளேயே கொண்டாடும் நாம், Worlds birthday வை  கொண்டாட வேண்டும் அல்லவா…..
அன்னையிடம் வேல் வாங்கும் காட்சி
முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் வேல் வடிவில் உருவாகி முருகனிடம் கொடுத்தாள். Philosophical ஆக சொல்வதானால் அறிமையின் வடிவம் அசுரன், அவனை இறைவனாகிய முருகன் ஞான வடிவாகிய வேலைக் கொண்டு அழிக்க போகிறார். (அதாவது Ignorance was defeated by intelligence) 
அத்தகைய வேலையை செய்ய போகிற வேல் (vel) பிறந்தநாள் (முருகன் பெற்ற நாள்) தைப்பூசத் திருநாள் ஆகும்.

ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாளில் தான். அதாவது முறையான பக்தி செய்தால் ஜீவாத்மாவான நம்மை தேடி வந்து இறைவன் ஆட்கொள்ளவான் என்று உணர்த்திய தினம். வள்ளி திருமணம் உணர்த்தும் தத்துவம் இது தான்.



புலிக்கால்  முனிவரான (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன்,முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார்.இறைவனுடைய ஆடலே உலக இயக்கத்தை நடக்கிறது என்பதை உணர்த்தி மனிதனின் கர்வத்தை போக்கிய சம்பவம் நடந்த தினம் இத் தைப்பூசம்.





பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானை, குருவின் குருவான  ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.ஆக ஞானம் தரும் நாளாக விளங்குகிறது.

காந்திமதி அம்மன்,நெல்லையப்பர்
திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.





சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து,  நடராஜரை  இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளில். முனிவர்கள், தேவர்கள் மட்டுமல்ல நம்மை போன்ற மனிதர்களும் இறைவனை தரிசிக்க முடியும் என்று இரணியவர்மன் மூலம் உணர்த்திய நாள் இது.

கபாலீஸ்வரர் கோவிலில் பூம்பாவை கோவில்

பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.






திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பர். கொடிய தோஷங்கள் நீக்கும் நாளாக திகழ்கிறது.

தைப்பூச நாளில்தான் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள். அதுவரை மதுரை கோயிலில் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படும்.

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன். அப்போது ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது. ஆக இந்நாள் சைவ வைணவ ஒற்றுமையை உணர்த்துகிறது.

கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் (காவேரி நதி) ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் தைப்பூச நன்னாளிள் காட்சி கொடுத்து அருளினார். ஆகையால் இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. (இன்றைய சூழலில் அந்த திருச்சேறை பெருமாள் காவிரிக்கு பிரச்சனையால் வாடும் தமிழக விவசாயிகள் துயர் தீர்க்க பிராத்திப்போம்)


அருட்பெருஞ் சோதி தனி பெரும் கருணை என்ற உண்மையை வழங்கிய 

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச 

நட்சத்திரத்தன்று தான் முக்தி அடைந்தார்

அவர் ஏற்றிய தீபம் 1872 இல் இருந்து இன்று வரை 

அங்கே எரிந்து கொண்டு இருக்கிறது. தைப்பூசத்தன்று ஏழு 

திரைகளும் விலகி கண்ணாடி வழியே ஜோதி தரிசனம் 

காணாலாம். (மற்ற நாட்களில் ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும்) 

ஒவ்வொரு திரையும் ஒவ்வொரு நிறத்தில் ஒவ்வொரு 

தத்துவத்தை உண்ர்த்துகின்றன. 

இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள…..






தைப்பூச நன்னாளில் பிராதனமாக முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் மற்றும் முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில், சிவபெருமானின் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்பொழுது அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் நன்மைகள் சேரும்.

பழனி- ஒளி வெள்ளத்தில்
இவற்றுள் பழனியிலே மிகச் சிறப்பாக 

தைப்பூச விருவிழா கொண்டாடப்பட்டு 

வருகிறது. 

பழனியில் பெரியநாயகி அம்பிகை (பார்வதி) கைலாசநாதருடன் (சிவன்) தனிக்கோயிலில் அருளுகிறாள். இவர்களது சந்நிதியின் நடுவில் முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பிரதான வாசலும்,கொடிமரமும் முருகன் சந்நிதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சந்நிதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது.
தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை முக்கிய தெய்வமாக 
வழிபட ஆரம்பித்தனர். காலப்போக்கில் மலைக்கோயில் முருகன் பிரபலமாகவே, 
முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. 
ஆனாலும், பழமை மாறாமல் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே 
நடக்கிறது.தைப்பூசக் கொடியேற்றம் இங்கு தான் நடக்கும். விழாவின்போது, இக்கோயிலில் 
உற்சவர் முத்துக்குமாரசுவாமி (முருகன்) தினமும் எழுந்தருளுவார். 
விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு வீதியுலா செல்கிறது. 
ஏராளமான பக்தர்கள் தங்கள் பங்குதாரராக பழநி முருகனை கருதுகின்றனர். தொழிலில் 
கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு பங்கு தந்து விடுகின்றனர். தைப்பூச விழா அன்று 
புதுக்கணக்கு ஆரம்பிக்க ஏராளமாக குவிகின்றனர்.

பத்து மலை- மலேசியா

இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை

மலேசியா,சிங்கபூர்,மொரீசியஸ்,

அமெரிக்கா 

போன்ற வெளி நாடுகளிலும் தைப்பூசம் 

விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 















காவடி எடுத்தல்,பால் குடம்,மற்றும் அலகு குத்துதல் போன்றவற்றின் மூலம் நேர்த்தக் 
கடன் செலுத்தப்படுகிறது.




ஆழ்ந்த கருத்துக்களையும், தத்துவங்களையும் புரிய வைப்பதற்காகவே கதைகள், திருவிழாக்கள் ஏற்படத்தப்பட்டுள்ளன என்பதை சொல்லவதே இப்பதிவின் நோக்கம்.
அறியாமை இருளை அகற்றும் தீபங்களாக திருவிழாக்களும், கடல் எல்லையும் கடந்து
மனித மனங்களை இனணைக்கும் பாலமாக பண்டிகைகளும் இருக்க வேண்டும் என்பது 
நமது விருப்பம்.

அந் நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றி கொண்டிருக்கும் இத்திருநாளை ஏன் 
திருவிழாவாக கொண்டாட கூடாது !! (ஏன் கொண்டாட வேண்டும் என மேற்கேட்ட 
கேள்விக்கு சரியான justification கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன்) 

இவ்வாண்டு தைப்பூசம் 7-2-12 அன்று வருகிறது. 


மிக்க சிறப்பு வாய்ந்த இந்நாளில் எல்லாம் வல்ல 
முருகபெருமான் நம்முடைய அனைத்து 
துயர்களை நீக்க பிராத்திப்பதோடு மட்டும் நில்லாமல் 
தானே புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்குகாவும் 
பிராத்திப்போம், நம்மால் இயன்ற உதவி 
செய்வோம் என்று உறுதி ஏற்போம்.



மீண்டும் சந்திப்போம்….. அதுவரை


தீப்ஸ்வாசன்.



2 comments:

Natrayan.M said... [Reply]

அற்புதமான பதிவு தமிழ் மக்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களும் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். உலகத தமிழர்களின் ஒற்றுமை இது போன்ற தைப் பூசவிழாக்களில்தான் பார்க்கலாம். உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நமது தைப் பூச வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம். தமிழினம் வாழ்க! உலக பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்.

Unknown said... [Reply]

@Natrayan.Mதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

Post a Comment

Older Post
Home